தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், உள்ளாட்சிகளில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
இதையடுத்து, தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. இதனிடையே தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அவசர சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிற நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.