விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, "கலைஞர் ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மையம் தொடங்கப்பட்டது. பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 2010-11 ஆம் ஆண்டில், நான்கு பாடப்பிரிவுகளுடன் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. சிதம்பரம் சென்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதும் நிலை மாறி, தற்போது விழுப்புரத்திலேயே நிரந்தர தேர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது முதுகலை மையத்தில் ஏழு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் உணராமல், அறிவிப்பு கிடைத்த உடனேயே அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த பயத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எங்களுக்கு பா.ஜ.க.வை கண்டு எந்த பயமும் இல்லை. முதலில், அன்புமணி ராமதாஸ் தனது தந்தைக்கும், தனக்கும் இருக்கும் பிரச்சினையை தீர்த்துவிட்டு வந்து பிறகு, தி.மு.க அரசின் திட்டங்கள் குறித்து பேசட்டும்.
தி.மு.க அரசின் நான்கு வருட சாதனையை பட்டியலிட்டால், முதலில் மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைத் தொகையைக் கூறலாம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எண்ணற்ற திட்டங்களை மகளிருக்காக உருவாக்கி அதை செயல்படுத்தி வருகிறார்" என்று பொன்முடி தெரிவித்தார்.