திமுக தலைவர் ஸ்டாலின் இனி, பிரசாந்த் கிஷோரின் பேச்சை மட்டுமே கேட்டு நடக்க இருப்பதால், எம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், வெற்றிவாகை சூட அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுகவின் இந்த நிகழ்வு, எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் இடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.
திமுகவின் அரசியல் ஆலோசகராக இருந்த சுனில் கொனேலேலு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விலகியதை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் தலைமையிலான I-PAC) அமைப்புடன் திமுக கைகோர்த்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை அள்ளியிருந்தது. அதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்காக, முன்னணி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்திருப்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கிண்டல் : இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, இனி திமுகவின் முடிவுகள், பிரசாந்த் கிஷோரின் I-PAC கருத்துகளை ஒட்டியே இருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் இனி, பிரசாந்த் கிஷோரின் கருத்துகளை மட்டுமே கேட்டு செயல்பட உள்ளதால் எம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார். கட்சி தொண்டர்கள், தலைவர்களின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை அக்கட்சி, பிரசாந்த் கிஷோர் உடனான கைகோர்ப்பின் மூலமாக இழந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.