தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக மாறி நின்ற திமுக நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், சில ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் சீட் கிடைக்காததால், திமுக நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாக போட்டியிட்டதால், அங்கே திமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதனால், திமுக ஒன்றிய கவுன்சிலர்களின் தோல்விக்கு காரணமான சுயேச்சையாக மாறி நின்ற திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டாலும், கட்சியிலிருந்த அதிருப்தி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் பல ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக இழந்தது. அதிருபதி வேட்பாளர்களால் ஏற்பட்ட வாக்கு பிளவு அதிமுக மற்றும் மற்றவர்கள் வெற்றிபெற உதவியதாக திமுக தலைமை நம்புகிறது.
இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சியில் காலியான இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பாட்டாலும் திமுக தலைமை தேர்தல் முடிவில் முழுமையாக திருப்தி அடையவில்லை.
9 மாவட்டங்களில் உள்ள 151 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில் திமுக தலைமையிலான கூட்டணி 149 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், 1,415 இடங்களில் 1,022 மட்டுமே (இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்கள் உட்பட) திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 220 இடங்களையும், சுயேச்சைகள் 90 இடங்களையும் வென்றனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கட்சியில் சரியான வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் சுயேச்சையாக மாறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர் என்று திமுக அடிமட்ட நிர்வாகிகள் திமுக தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்ற 90 சுயேச்சை கவுன்சிலர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அத்தகைய திமுக வேட்பாளர்கள் என்பது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைவதற்கு உள்குத்து வேலை பார்த்த சுயேச்சையாக போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற செயின்ட் தாமஸ் மவுண்ட் ஒன்றியத்தில் திமுக செயல்வீரரான அமுதா வேல்முருகனுக்கு 11 வது வார்டில் திமுகவில் சீட் கொடுக்க மறுக்கப்பட்டது. அதனால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த இடத்தை வென்றார். இவர் மட்டுமல்ல இவரைப் போல, மற்ற மாவட்டங்களில் சில திமுக நிர்வாகிகள் இதே போல செய்துள்ளனர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த தேர்தலில்100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதால், கட்சித் தலைமை அடிமட்டத்தில் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடிவு செய்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்த பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. திமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளரின் தோல்விக்கு காரணமான சுயேச்சையாக மாறி போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அதிருப்தி வேட்பாளர்களுக்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது என்று அவரைச் சந்தித்து விசாரிக்க ஒரு குழுவை திமுக தலைமை அனுப்ப உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 1415 இடங்களில் 1022 (இடைத்தேர்தல் நடந்த இடங்கள் உட்பட) வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 220 இடங்களை வென்றது. சுயேச்சைகள் கிட்டத்தட்ட 90 இடங்களை வென்றனர். அதனால், திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைவதற்கு காரணமான சுயேச்சையாக மாறி போட்டியிட்டு உள்குத்து வேலை பார்த்த திமுக நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.