MK.Stalin says cannot answer about Election funded to left parties: மக்களவைத் தேர்தலின்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி தேர்தல் நிதி அளித்தது பற்றி பிரேமலதாவுக்கோ செய்தியாளர்களுக்கோ பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தலில் எவ்வளவு செலவு செய்தனர் என்பது பற்றி கட்சியின் தேர்தல் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த அரசியல் கட்சிகளின் பிரமாணப்பத்திரங்களை அதனுடைய இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றியுள்ளது. அதில், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வரவு செலவு கணக்கு பிரமாணப்பத்திரம் பல விவாதங்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவின் பிரமாணப் பத்திரத்தில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும் தேர்தல் நிதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழக அரசியலில் திமுக மற்றும் இடதுசாரிகள் மீது எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகள் தொடுத்து விமர்சிப்பதற்கு காரணமானது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியது.
இதனைத்தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இடதுசாரிகளுக்கு திமுக ரூ.25 கோடி தேர்தல் நிதி கொடுத்ததைக் குறிப்பிட்டு பிரேமலதா விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா திமுக இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி தேர்தல் நிதி அளித்தது பற்றி விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் , “இது குறித்து செய்தியாளர்களுக்கோ, பிரேமலதாவுக்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் தந்துவிட்டோம்” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பதில் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. திமுக ஆதரவாளர்கள் தேர்தல் நிதி அளித்ததை திமுக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், அதைப்பற்றி திரும்பத்திரும்ப கேட்டால் இப்படிதான் பதில் வரும் என்றும் திமுகவை விமர்சிப்பவர்கள் ஏன் கேள்வி கேட்க கூடாதா? என்று திமுகவை விமர்சித்து சர்ச்சை பதிவிட்டு வருகின்றனர்.