பத்திரிகையாளர் மீது தாக்குதல் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? – ஸ்டாலின் கேள்வி

MK Stalin slams minister Rajendra balaji : தமிழகத்தில் - மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

By: March 4, 2020, 2:18:44 PM

தமிழகத்தில் – மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்முறையையும் கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும், பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் – மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகைச் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆவின் மேலாளர் (நிர்வாகம்) பதவிக்கு, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் மனைவியும், மற்றொரு மேலாளர் பதவிக்கு விருதுநகர் அ.தி.மு.க. பிரமுகர் மகனும் நியமிக்கப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்குக் காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வழக்கமாக நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், ஏற்கனவே மதரீதியான வன்முறை – வெறுப்பு வார்த்தைகளை மேடைகள்தோறும் வெளிப்படுத்தி வருவதுடன், தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்துவேன் என தடித்த வார்த்தைகளையும் எவ்விதக் கூச்சமும் அச்சமுமின்றிப் பயன்படுத்தி வருகிறார். ஊடக வெளிச்சம் எனும் மலினமான அரசியல் விளம்பரத்திற்காக, முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் முதலமைச்சர் போலச் செயல்படும் அமைச்சரின் சொற்கள் பலவும் நச்சுத் தன்மை மிக்கவையாக உள்ளன. ‘அம்மா வழி ஆட்சி’ என்பவர்களின் பேச்சுகளும், அதைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் வன்முறைகளும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அமைதிக்குக் கேடு செய்து, குலைக்கின்ற வகையிலேயே தொடர்கின்றன.

எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் – “அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்” என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?

இதற்கு, இந்த முற்றிப்போன நிலையிலாவது, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk president mk stalin condemn minister rajendrabalaji

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X