மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்

DMK President MK Stalin did arrested under MISA act?: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான...

DMK President MK Stalin did arrested under MISA act?: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்துசெய்யப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திடீரென விவாதமாகியுள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதாக திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, மிசா காலத்தில் மிசா கொடுமையினால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது. இந்த அறிக்கையில் இல்லையென்றால் அது இல்லையென்றாகிவிடாது. இந்த அறிக்கையில் இல்லாதது தனக்கு தெரியாது என்றும் தான் நீதிபதி ஷா அறிக்கையை படிக்கவில்லை என்றும் கூறினார். இந்த நேர்காணல், தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

முதலில் மிசா சட்டம் என்றால் என்ன அதன் பின்னணி குறித்து ஒரு பார்வை பார்க்கலாம்.

1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் (The Maintenance of Internal Security Act) என்கிற மிசா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் மத்திய சட்ட அமலாக்கத்துறைக்கு மிகப் பெரிய அளவிலான அதிகாரத்தை அளித்தது.

இந்த சட்டம் மூலம் ஒரு தனிநபரை கால வரையறையின்றி தடுத்துவைக்கலாம். அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாமல் ஒருவருரை சோதனை செய்யலாம், சொத்துகளை முடக்கலாம், பறிமுதல் செய்யலாம். இந்தியாவில் சிவில் அரசியல் சீர்கேடுகளை அகற்றவும், வெளிநாட்டு உதவியுடன் நாசவேலை, பயங்கரவாதம், சூழ்ச்சி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் நெருக்கடி நிலை கால பின்னணியில்தான் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தி 1971 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞர் சாந்திபூஷண் வாதிட்டார். நான்கு ஆண்டுகள் மெதுவாக நடைபெற்ற அந்த வழக்கில், 1975 ஜூன் 12ஆம் தேதி நீதிபதி ஜகன் மோகன் லால் சின்ஹா, இந்திரா காந்தி தேர்தலில் சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதோடு, இந்திரா காந்தி ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதிவரை 19 மாதங்கள் நீடித்தது.

இந்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எதிர்க்குரல்கள் நசுக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையை எதிர்த்து காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் பல கிளர்ச்சியாளர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துகளுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.

இந்திரா காந்தியின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் காமராஜர், தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் அல்லது ஸ்தாபண காங்கிரஸும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். அப்போது, சிறையில் காவல்துறை அதிகாரிகளால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுதான் இப்போது விவாதமாகியுள்ளது.

மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பலர் நெருக்கடி காலம் முடிவுக்கு வந்த பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது தங்களின் போராட்ட அரசியலுக்கு அடையாளமாக மிசா என்கிற அந்த ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னாள் இணைத்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தடா சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் கைதானவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் தடா என்று குறிப்பிடத் தொடங்கினர்.

இப்படி இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலை காலகட்டத்தில் கைதானது உண்மைதான் ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. அதனால், அவருடைய பெயர் மிசா சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரித்த நீதிபதி ஷா கமிஷன் அறிகையில் இடம்பெறவில்லை என்று விமர்சனம் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த விமர்சனத்துக்கு திமுக கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நேர்காணல் ஒன்றை எடுத்து அதில் எமெர்ஜென்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க தனியார் தொலைக்காட்சி முயற்சி செய்திருப்பதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

“மிசா காலத்தில் ஒருவரை மிசா சட்டத்தில்தான் கைது செய்வார்களே தவிர, “பொடா” சட்டத்திலா கைது செய்வார்கள் பாஜகவின் அடிவருடியாக விளங்கும் தனியார் தொலைக்காட்சி பொய்யை பரப்ப முயல்வதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், நெருக்கடி நிலைமையின்போது மிசாவின் கடுமையான தொடர் தாக்குதலுக்கு உள்ளானது திமுக அக்கட்சியைச் சேர்ந்த 400 பேருக்கு மேல் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையில் திமுகவினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் – அடக்குமுறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஒரு தனி விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது என்பதைக்கூட மறந்து இப்படியொரு உள்நோக்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரமாக கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் உள்ள தகவலைக் குறிப்பிடுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையின்போது மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என்பதுதான் எதிர்க்கட்சியினர் பலருடைய கேள்வி.

இது பற்றி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது உண்மைதான் என்றும் சிறையில் மிசா கைதியாகத்தான் இருந்தார்  செய்தி இணையதளத்திடம் கூறியுள்ளார். இது பற்றி கருணாநிதி, ஸ்டாலினிடம் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செய்தித்தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அவசரநிலை காலத்தில் தமிழகத்தில் நடந்த அத்து மீறல் குறித்த குற்றசாட்டுகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஸ்மாயில் விசாரித்தார். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் சட்ட மன்றத்தில் இஸ்மாயிலின் அறிக்கை வைக்கப்பட்டு முறையாக விவாதிக்கவில்லை என தமிழக சட்ட மன்றத்தில் திமுக, ஜனதா, மார்சிஸட் கம்யூனிஸட்டுகள் என எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அந்த அறிக்கையில்,‘ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர் என இஸ்மாயிலின் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன். என்னிடம் அந்த அறிக்கை உள்ளது. ஆனால், அதைத் தேடனும்….” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஐ.இ தமிழுக்கு கூறுகையில், மிசா கைது நிகழ்வின்போது சென்னை மத்திய சிறையில் அதிகாரியாக இருந்த வித்யாசாகர் மீது மிசா சித்திரவதை குற்றச்சாட்டு இருந்ததைக் குறிப்பிடார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், எமர்ஜென்சி காலங்களில் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்கள் அந்த காலத்தில் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பிய கேபிள் குறிப்புகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில், மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மகன் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close