தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன . அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரையில் ஈடுபட்டார்.பிரச்சாரம் ஓய்வதற்கு முந்தைய 21 நாட்களில் மட்டும் 70 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.
இதனால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க எங்கு செல்லலாம் என ஸ்டாலின் ஆலோசித்து வந்தார். அதில் முதல் சாய்ஸாக மாலத்தீவுக்கு போகலாம் என பேசப்பட்டது. ஆனால் வெளிநாடு சென்று வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமாம். இந்த 10 நாட்களில்தான் வாக்கு எண்ணிக்கையும் வருகிறது. இதனால் அந்த யோசனையை நிராகரித்து விட்டாரம் ஸ்டாலின்.
தமிழகத்திற்குள் எங்கேயாவது சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து ஏலகிரி போகலாம் என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஏலகிரி துரைமுருகன் பங்களாவில் தங்கலாம் என்பது முதலில் விவாதிக்கப்பட்டதாம். ஆனால் தற்போது அங்கு கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த ஐடியாவையே கைவிட்டுவிட்டனராம்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் பிரமுகரிடம் ஆலோசித்து பின்னர் கொடைக்கானல் செல்ல முடிவெடுத்துள்ளனர்.இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொடைக்கானலுக்கு மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் புறப்பட்டனர். 19ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலின், செந்தாமரை, கிருத்திகா உதயநிதி, இன்பன் உதயநிதி, தன்மயா உதயநிதி, நிலானி சபரீசன், நளன் சபரீசன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு விமானத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் கொடைக்கானல் சென்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என பல தரப்பிலிருந்தும் நம்பிக்கையான தகவல்கள் வருவதால் அமைச்சரவையில் யார் இடம்பெறலாம் என ஸ்டாலின் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"