மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திருச்சியில் தி.மு.க சார்பாக போராட்டம் நடைபெற்றது.
நேற்றைய தினம் (டிச 17) மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, “இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” எனக் கூறினார்.
இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் அமித்ஷாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மேலும், மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகேயும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், சபியுல்லா, பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது அமித்ஷாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“