தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணிகளில் கலந்துகொள்கிறார். மேலும், கழிவறையை திறந்துவைத்து ஆய்வு மேற்கொள்ளும் அவர், சரஸ்வதி மஹாலிலும் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும், மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்கும் இடத்தையும் அவர் மேற்பார்வையிடுகிறார். அதன்பின், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்க உள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் மாநில உரிமைகளில் தலையிடுவதாக கூறி, அவரது ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விவசாயிகள் குறைகளை கேட்டறிவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.