குட்கா ஊழலை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: குட்கா ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சுமார் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். குட்கா விற்பனையில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடிகள் பற்றி அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய வருமான வரித்துறை ஆய்வின் மூலம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் முதலமைச்சரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுபோல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாயை முதலீடு செய்து இருப்பதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (செப்.18) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 8ம் தேதி சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்று அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பினர்.
சேலம் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரியும் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பியபடியே இருந்தனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், "மக்கள் பார்க்காத ஊழலை அதிமுக செய்கிறது. இந்த ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும். ஊழலின் கதாநாயகன் எடப்பாடி, அவரது அமைச்சர்கள் கூட்டாளிகள். நான் கருணாநிதி மகன்... பேசியது தவறு என்றால் வழக்கு போடட்டும்" என்றார்.
சென்னையில் 5 இடங்களில் தி.மு.க.வினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொண்டர்கள் கையில் தி.மு.க. கொடி ஏந்தி ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக கோரி கோஷமிட்டனர். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.