தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வருகிற 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கடந்த 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதே நாளில்தான் பிரதமர் மோடியின் சென்னை விசிட் இருந்ததால், அந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு பலத்த மழை காரணமாக வட மாவட்டங்களில் மட்டும் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக திமுக அறிவித்தது. கடைசி நேரத்தில் மாநிலம் முழுவதும் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஒத்தி வைத்த போராட்டத்தை நவம்பர் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்தும்படி இன்று (17-ம் தேதி) மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்திற்கான காரணம் குறித்து மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்த கருத்துகள் வருமாறு:
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் சர்க்கரை கிலோ விலை 13 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பது தான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம்.
தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புக் கொண்ட குதிரை பேர அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாடாளுமன்றத்தில் மத்திய உணவு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி, தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.
கடமையைச் செய்யத் தவறி இன்றைக்கு பொது விநியோகத்திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மான்யங்களை எல்லாம் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசு திடீரென்று சர்க்கரை விலையை இரு மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
நாளடைவில் பொது விநியோகத் திட்டத்தையே ரத்து செய்வதற்கு கூட இந்த குதிரை பேர அரசு சம்மதித்து அனைத்து தரப்பு மக்களையும் இருட்டில் தள்ள தயங்காது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விஷம் போன்ற விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அரசை கண்டித்தும், சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேசன் கடைகள் முன்பும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.