மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார சரிவு, வேலை வாய்ப்புகள் இழப்பு, காஷ்மீர் பிரச்னை போன்ற முக்கியமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிடும் திட்டத்துடன் இந்தியாவின் அடையாளமாக ஒரேயோரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு, திமுக இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் புறக்கணித்து இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மொழிவாரி மாநிலங்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், அவற்றிற்கு விடப்பட்டிருக்கும் சவால் என்று இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
அன்னைத் தமிழுக்கும், பிற மாநிலத்தவரின் தாய்மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டிய பொறுப்பு பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் திமுகவிற்கு இருக்கிறது. பா.ஜ. அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால், அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக்கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதல்கட்டமாக, திமுக செப்டம்பர் 20, 2019 ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானிக்கிறது என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.