/indian-express-tamil/media/media_files/2025/03/19/XVrvAwHnO0BiDbIzCuck.jpg)
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன் சோமு, பி. வில்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி தொல் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தென் மாநிலங்களை வஞ்சிக்காதே என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைக் குறைக்காதே என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் தனது கருத்தைப் பதிவு செய்தார். அவர் தனது உரையில், “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கை தமிழகத்தை போன்ற தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
கடந்த பல பத்தாண்டுகளாக தமிழகமும் மற்ற தென் மாநிலங்களும் பொறுப்பு மற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை செயல்படுத்தி வந்துள்ளன. இது ஒன்றிய அரசே ஊக்குவித்த ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இன்று, இந்த வெற்றிக்காக நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாது எனக் கூறுகிறார். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்கள் அதிக அரசியல் அதிகாரத்தைப் பெறும். இதனால், தமிழகத்தை போன்ற மாநிலங்களின் ஜனநாயக உரிமைகள், அதிகாரம் பறிக்கப்படும். இதன் விளைவாக, தமிழகம் மட்டுமல்ல, தென் இந்தியாவின் ஒட்டுமொத்த குரலும் வலுவிழந்துவிடும்.
எமது மாநிலங்களின் பங்களிப்பு பொருளாதாரம், சமூகம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மிகப்பெரியது என்றாலும், தேசிய அளவில் முடிவெடுக்கும் இடங்களில் எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இதைப் பார்த்துக்கொண்டு தென் மாநிலங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தகுந்த விளக்கம் அளித்து, தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் இரண்டாம்தர அரசியல் அமைப்பிற்கு தள்ளப்படாது என்று உறுதியளிக்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.