குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டம் குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், திருச்சி, திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “மத்தியில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கும் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
பாஜக அரசு கொண்டு வந்திருப்பது குடியுரிமைச் சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?
பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களை பார்த்துக்கொண்டு கைகட்டி, வாய்பொத்தி கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; தந்தை பெரியாரின் - அறிஞர் அண்ணாவின் - தலைவர் கலைஞரின் கூட்டம்!#DMKagainstCAA pic.twitter.com/mQmvKlzN40— M.K.Stalin (@mkstalin) December 17, 2019
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளைக் கண்டு, அஞ்சி, நடுங்கி எடப்பாடி பழனிசாமி போல் ஒடுங்கி விடுகிற இயக்கம் திமுக அல்ல. அடுத்தகட்டமாக, தமிழகத்தில் இருக்கும் தி.மு.கழகத்தின் 65 மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திடவேண்டும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவுறுத்தி இருக்கிறோம்.
பிரதமர் மோடி கடந்தகால தேர்தல்களில் அவர் அளித்த வாக்குறுதி, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் எனச் சொன்னார். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்தி காட்டுவேன் என பிரதமர் சொன்னார். செய்தாரா? இல்லை!
அதனால் என்ன செய்தார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலையை மட்டும் செய்து வருகிறார்கள்.
மக்களை துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். உதாரணத்திற்கு, காஷ்மீரில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தார்கள். முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்தியாவை வாழவைப்பது, மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியின் நோக்கம் அல்ல; அவர்களுடைய நோக்கம் எல்லாம், இஸ்லாமியர்களை நசுக்குவதுதான்.
சிறுபான்மையினராக இருக்கும் அந்த மக்களை கொடுமைப்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.
அவசர அவசரமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். குடியுரிமை சட்டம் என்றாலே அதன் உண்மையான பொருள் வெளிப்படையாக தெரியும். குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்று அதற்கு பொருள். குடியுரிமைச் சட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு குடிகளின் உரிமையை இன்றைக்கு பாஜக ஆட்சி பறித்துக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் இது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? எதற்காக இந்த ஓரவஞ்சனை? இஸ்லாமியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஈழத்தமிழினம் மட்டும் பாவம் செய்த இனமா? இதைக் கேட்பது எங்களது உரிமை.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம்! அறிஞர் அண்ணாவின் கூட்டம்! தலைவர் கலைஞரின் கூட்டம்!
மதத்தால் மக்களைப் பிளவு படுத்தி பார்ப்பதால்தான் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்திய அரசை மதச்சார்பற்ற அரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது.
11 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததால்தான் மசோதா மாநிலங்களையில் நிறைவேறியது. எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்த கூட்டம் நடத்தவேண்டிய அவசியம் வந்திருக்காது. வடமாநிலங்களில் வன்முறை நிகழ்ந்திருக்காது. இந்தியா முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிவதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள்தான் காரணம். பற்றி எரிகிறது இந்தியா. மத்திய பா.ஜ.கவுக்குத்தான் ஈழத்தமிழர்களைப் பற்றி கவலை இல்லை என்றால் அ.தி.மு.க அரசுக்கும் கவலை இல்லை.
சிறுபான்மையினர் விரோத நடவடிக்கைகளை தமிழர் விரோத செயல்பாடுகளை நீங்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டெழும் என்று எச்சரிக்கிறேன்.
அதிகாரம் கையில் இருக்கிறது, ஆட்சி கையில் இருக்கிறது, பெரும்பான்மை கையில் இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்ய நினைத்தால் அந்த ஆணவமே உங்களை வீழ்த்தி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.” என்று கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேசியதாவது: குடியுரிமை சட்டத்திருத்தத்தை இயற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை திசைத்திருப்புவதே பா.ஜ.கவின் திட்டம். இந்தி பேசுவோரின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பா.ஜ.க செயல்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எங்கள் அரசு பாதுகாப்பாக உள்ளது என பா.ஜ.க கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. குடியுரிமை சட்டம் இந்தி பேசும் இந்துக்களுக்கு ஆதரவாகவும், தமிழ் பேசும் இந்துக்களுக்கு எதிராகவுமே பா.ஜ.க இதனை கொண்டு வந்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அனுமதிக்காது. சிறுபான்மையினரின் பாதுகாவலனாக தி.மு.க என்றுமே இருக்கும்” என்று கூறினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசைத்திருப்பவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது. குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க செயல்பட்டதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற அவர், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்களை குடிமக்களாக ஏற்கும் மத்திய பா.ஜ.க அரசால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள தமிழர்களை ஏன் குடிமக்களாக அங்கீகரிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சட்டத்தை வாபஸ் பெரும்வரை தி.மு.கவின் போராட்டம் தொடரும்” என்றார்
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், குடியுரிமைச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய காவல் துறையின் அராஜக போக்கை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து சங்கரன்கோவில் ஜமாத் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.