தி.மு.க எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான வழி என்று தமிழகத்தில் ஆளும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சியான அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜ.க, த.மா.கா, போன்ற கட்சிகள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.
தமிழகத்தில் பி.எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தமிழகத்திற்கு சமக்ர சிக்ஷான் திட்டத்திற்காக விடுவிக்கப்பட வேண்டிய 2100 கோடியை விடுவிக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது கடும் கண்டனங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில், நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. அப்போது, தமிழக அரசு குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதற்கு தி.மு.க எம்.பி.க்கள் மற்றும் அதன் கூட்டணி கட்ச் எம்.பி.க்கள் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்திற்கு சரியான புரிதல் இல்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், திடீரென தனது நிலைபாட்டை மாற்றியது ஏன்? தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வந்தபோது, முதல்வர் அதை தடுத்துவிட்டார். தமிழ்நாடு மாணவர்களின் நலனை அரசு வஞ்சிக்கிறது. திமுக எம்.பிக்கள் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் அற்றவர்கள். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தி.மு.க அரசு மக்களிடம் நேர்மையாக இல்லை” என்று கடுமையாகச் சாடினார்.
தி.மு.க எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தி.மு.க எம்.பி.க்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தான் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட மாநிலம் முழுவதும் தி.மு.க-வினர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.