கொங்கு மண்டலம் அல்லது மேற்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொங்கு மண்டலம் எப்போதும்போல் அதிமுகவின் கோட்டை என இந்த 2021 சட்டமன்றத் தேர்தலும் நிரூபித்துள்ளது. இங்கு 50 தொகுதியில் 33 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. இந்த முறையும் திமுகவால் இங்கு பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. 50 தொகுதிகளில், 17 இடங்களில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு இந்த பகுதியில் கூடுதல் சவால் அளிக்கும் வகையில், கொங்கு பகுதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இருந்தார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் கரூரில் மட்டுமே திமுக முழுமையான வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதேநேரம் கோயம்புத்தூரில் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது. கரூரில் திமுக பெற்ற வெற்றிக்கு தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மிக முக்கியமானது. செந்தில் பாலாஜி இதற்கு முன்னர் அதிமுகவிலும், பின்னர் தினகரனின் அமமுகவிலும் இருந்தவர்.
இதனால் கொங்கு மண்டலத்தில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வருட கடைசியில் எதிர்ப்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பெற திமுக, கொங்கு பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. திமுக வலுவான அடித்தளத்தை அமைக்க முயற்சித்து வருகிறது. ஏனெனில் இங்கு உள்ளூர் தலைவர்களின் பற்றாக்குறையும், அவர்கள் களநிலவரத்தை புரிந்துகொள்ளதது, களத்தில் இறங்கி சரியாக வேலை செய்யாதது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், மேற்கு மண்டலத்தை பலப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் நோக்கில், அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சக்கரபாணிக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருவரை திமுக பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஓட்டுகள் பெற்றார். சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின், மகேந்திரன் போன்ற செல்வாக்கு மிக்க நபர்கள், சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இருந்திருந்தால் கட்சி, இன்னும் சில இடங்களை பெற்றிருக்கும் எனக் கூறியிருந்தார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுக பலம் வாய்ந்த கட்சி தான் என்றாலும், சமீபத்தில் அந்த பகுதிகளில் பாஜக வின் வளர்ச்சியும் திமுகவை கொங்கு பகுதியில் அதிக கவனம் செலுத்த வைக்கிறது. பாஜக சட்டமன்ற தேர்தலில் வென்ற 4 இடங்களில் இரண்டு இந்த பகுதியைச் சேர்ந்தவை. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராய் இருந்த எல்.முருகன் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்தான். அவர் இப்போது மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். அதேநேரம் தற்போது, தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.