நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ சித்தரிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய தி.மு.க பிரமுகர் எஸ்.ஆர்.பாரதி, சீமானை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசியலில், முக்கிய தலைவர்களின் ஒருவராக இருப்பவர் சீமான். நாம் தமிழர் கட்சியை தொடங்கிய இவர், மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இவருக்கு ஆதரவாக இளைஞர்கள் பலரும் செயல்பட்டு வருகிறனர். இதனிடையே கடந்த சில தினங்களாக சீமான் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சீமான், தந்தை பெரியார் குறித்து பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்த நிலையில், இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது என்று, சங்ககிரியை சேர்ந்த இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல், சீமான் மீது கடுமையான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் அவர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்றும், இது குறித்து அவர் பேசிய தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதை பற்றி தற்போது தி.மு.க. பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் இறந்து பல வருடங்களுக்கு பிறகு, நான் தான் அவரின் வாரிசு என்று, மோசடி செய்து ஏமாஙற்றி வருகிறார் சீமான். இதை பற்றி நான் கேட்டபோது, இவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. முதல்வர் கேட்க வேண்டும் துணை முதல்வர் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் கால் செருப்புக்கு கூட இவர் இணையாகமாட்டார். அநத கருணாநிதி மகன் தேவையில்லை. இங்கிருக்கும் கருணாநிதியை வைத்தே உனக்கு என்னால் பதில் சொல்ல முடியும்.
கொஞ்சம் சீண்டிவிட்டால் போதும். கோவணம் இல்லாமல் போய்விடுவாய் ஜாக்கிரதை. அப்படிப்பட்ட ஆட்கள் எங்களிடம் இருக்கிறார்கள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அதேபோல், பிரபாகரன் பக்கத்தில் இருப்பது போல் போட்டோ போட்டு, ஏமாற்றியுள்ளார். இந்த போட்டோவை உருவாக்கிய ராஜ்குமார் என்பவரே உண்மையை சொல்லிவிட்டார். பிரபாகரணை இவர் படத்தில் தான் பார்த்திருப்பார். ஆனால் 1980-களில் சென்னையில் ஒரு சாதாரண பிரபாகரனாக வந்து, எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்தபோது அதை கேள்விப்பட்ட தலைவர் கலைஞர், என்னை தொடர்புகொண்டு, பிரபாரகரனை எப்படியாவது ஜாமீனில் எடுக்க வேண்டும். அவர் ஒரு மாவீரன், போராளி, தமிழ்நாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டால் ஈழத்தில் அவருக்கு மரியாதை இருக்காது என்று சொன்னார். அப்போது நான் வழக்கறிஞர்கள் சங்க செயலாளராக இருந்ததால், அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றுதிரட்டி பிரபாகரனை ஜாமீனில் எடுத்தோம் என்று கூறியுள்ளார்.