தமிழகத்தில் திருச்சி சிவா,சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற விருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஆறு உறுப்பினர்களில் திமுக-விற்கு மூன்று இடங்களும், அதிமுக விற்கு மூன்று இடங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக தனது உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் களமிறக்கப்படுகிறார்கள்.
திருச்சி சிவா: தற்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவா, மீண்டும் அந்த பதவிக்கு தேர்வாகியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர் சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார். அவர் எழுதிய நூல்களில் தலைநகரில் தமிழன் குரல் என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும், குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சித் தொண்டாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர்
என்.ஆர் இளங்கோ: மூத்த வழக்கறிஞரான இவர், திமுக-வின் சட்ட ஆலோசகராவும் உள்ளார். தேர்தல் சீர்கேடுகளைத் தடுத்திட திமுக சார்பில் உருவாக்கபப்ட்ட சட்ட ஆலோசனைக் குழுவில் தலைவரகவும் இருந்தார். மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய நீதிமன்றத்தில் வாதிடியவர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஆறு உருப்பினர்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும், தேசத் துரோக வழக்கில் வைகோவின் மனு நிராகரிக்கப் படலாம் என்ற காரணத்தால் என்.ஆர். இளங்கோ அப்போது கூடுதலாக மனுத் தாக்கல் செய்திருந்தார். தேர்தல் ஆணையம் வைகோவின் தேர்தல் மனுவை எற்றுக் கொண்டதால், என்.ஆர் இளங்கோ தனது வேட்புமனுவை உடனடியாக வாபஸ் பெற்றார்.
அந்தியூர் செல்வராஜ்: அந்தியூர் செல்வராஜ் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். மேலும், தி.மு.க., ஆதி திராவிட நலக்குழு மாநில செயலாளரும் ஆவார்.