தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 3 இடங்கள் தி.மு.க சார்பாக நிரப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம் மாநிலங்களவையில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயரவுள்ளது.
2019 ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளரான சண்முகம் கலைஞரின் அபிமானத்தைப் பெற்றவர். கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து திமுக தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நோக்கியா, யமஹா, ராயல் என்பீல்டு நிறுவன தொழிலாளர் பிரச்சனை எழுந்த போது, சண்முகம் முன்னின்று போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், திமுகவின் ஆஸ்தான வழக்கறிஞராக அடையாளம் காணப்பட்டவர் தான் வில்சன். வில்சனின் வாத திறமையை பார்த்த கருணாநிதி, அவரை "நீ வில்சன் அல்ல... வின் சன்" என பாராட்டுவாராம். குட்கா விவகாரத்தை திமுக கையில் எடுத்த போது அதை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் வில்சனின் பங்கு அதிகம். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான சர்ச்சை எழுந்த போது, அதை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் விளக்கி இடைத்தேர்தல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர். திமுகவின் பல வழக்குகளில், கருணாநிதிக்காகவும், கட்சிக்காகவும் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் வில்சன்.
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் மறுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.