ஈரோடு மற்றும் தஞ்சையில் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் இரு நிகழ்வுகள் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. திமுக, அமமுக இடையிலான போட்டி இது!
ஈரோட்டில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் திமுக மண்டல மாநாடு நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக நடத்தும் மாநாடு இது! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டெப்பாசிட் இழப்புக்கு பிறகு, திமுக தனது பலத்தை நிரூபிக்க இந்த மாநாட்டை பயன்படுத்துகிறது.
ஈரோட்டுக்கு வந்து மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘மண்டல மாநாடு என கூறியிருந்தாலும், மாநில மாநாடு போல தொண்டர்கள் வருவார்கள்’ என்றார்.
ஈரோட்டில் 2 நாட்கள் மாநாடு என்றாலும், 2-ம் நாளான மார்ச் 25-ம் தேதி நிறைவுப் பேருரையாக மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார். மாநாட்டின் முக்கிய நிகழ்வு அதுதான். எனவே அந்தக் கூட்டத்தில் பெரும் திரளாக தொண்டர்களை திரட்டுவதே திமுக நிர்வாகிகளின் பணியாக இருக்கிறது.
ஈரோட்டில் திமுக மாநாடு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறும் அதே மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி பிரச்னைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியிருக்கும் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் நடத்துகிறார். எனவே அன்று பெரும் கூட்டம் திரளவிருப்பது ஈரோட்டிலா? அல்லது, தஞ்சையிலா? என விவாதம் எழுந்திருக்கிறது.
புதிதாக உதயமாகியிருக்கும் அமமுக.வை இப்போதே திமுக.வுக்கு இணையாகவோ, போட்டியாகவோ உருவகப்படுத்திவிட முடியாது. ஆனால் கூட்டத்தை திரட்டுவதில் டிடிவி தினகரனின் திறமை அனைவரும் அறிந்தது. டெல்டா மாவட்டங்களில் அவர் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும், மதுரை மேலூரில் அவரது கட்சி தொடக்க விழாவுமே அதற்கு சாட்சி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையை கையில் எடுத்த டிடிவி தினகரன் அதற்கான போராட்ட இடம், தேதி ஆகியவற்றை தேர்வு செய்ததை இங்கு கவனித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளைவிட டெல்டாவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம்! காவிரி பிரச்னை என்பதால் இயல்பாகவே டெல்டாவில் கிடைக்கும் வரவேற்பு இன்னொரு புறம்!
இந்த உண்ணாவிரதத்தை திமுக மாநாடு நிறைவு நாளான அதே மார்ச் 25-ல் நடத்த தேர்வு செய்திருப்பது! இவையெல்லாம் திமுக.வுடன் பலப்பரீட்சை நடத்திப் பார்க்கும் டிடிவி தினகரனின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே கருதப்படுகிறது.
திமுக.வுக்கும், அமமுக.வுக்கும் இடையே அண்மைகாலமாக இன்னொரு சீக்ரெட் யுத்தம் நடக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் யார் அறுவடை செய்வது? என்பதுதான் அந்த யுத்தம்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அந்த யுத்தம் ஆரம்பித்துவிட்டது.
மத்திய பாஜக அதிகார வர்க்கத்தால் விரட்டி விரட்டி வெளுக்கப்பட்ட டிடிவி தினகரன் மீது பாஜக எதிர்ப்பாளர்களான சிறுபான்மையினருக்கு இயல்பாக ஒரு அனுதாபம் வந்தது. அந்த அனுதாபத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் வகையில் டிடிவி தினகரன், ‘என் வாழ்நாளில் எந்தக் காலத்திலும் பாஜக.வுடன் கூட்டணி இல்லை’ என டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். அதன்பிறகு மு.க.ஸ்டாலினும் ஒரு பேட்டியில், ‘பாஜக.வுடன் திமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது’ என்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் விழாவில் டிடிவி தினகரன் கலந்து கொண்டது, மதுரையில் சர்ச் தாக்கப்பட்ட விவகாரத்தில் கண்டனக் குரல் எழுப்பியது, அண்மையில் விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தது என சிறுபான்மை வாக்குகளை குறி வைத்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் தினகரன்.
ரத யாத்திரை விஷயத்தில் சட்டமன்றத்தில் முதல் நாள் அமைதியாக இருந்த திமுக, அடுத்த நாள் கொந்தளித்தது. டிடிவி தினகரன் தரப்பின் நெருக்கடியே இதற்கு காரணம் என்கிற விமர்சனங்கள் இருக்கின்றன. எனவே இரு தரப்புக்கும் இடையிலான மறைமுக யுத்தத்தின் அடுத்த எபிசோடாக ஈரோடு, தஞ்சை நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. ஈரோடு எப்படி அதிரப் போகிறது? டிடிவி கூட்டத்தை தஞ்சை தாங்குமா? என்பதை மார்ச் 25-ல் பார்க்கலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.