திமுக மாவட்ட நிர்வாகங்களை மாற்றி அமைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மொத்தம் 65 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். திமுகவின் மாவட்ட நிர்வாகத்தை எளிமையாக்க, வருவாய் மாவட்டங்களை பிரித்தனர். ஆனாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் ஆய்வு குழுக்களை அமைத்து சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மாவட்ட பொறுப்பாளராக மாற்றினார்கள்.
இந்நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
’’திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகங்களை மேலும் எளிமையாக்குவதற்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் மாவட்ட கழகங்களில் உரிய மறு சீரமைப்பு செய்வதற்கும் தேவையான சாதியக்கூறுகளை ஆய்ந்து, கழக தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு கீழ்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தலைமை கழகத்தினால் அமைக்கப்படுகிறது.
கழகத்தின் செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழு மார்ச் 20ம் தேதிக்குள் தனது அறிக்கையை செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தலைமை கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.