ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு பதிலளித்த தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ஆதாரமற்ற பிரசாரத்தில் ஆளுநர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாடு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் கூறிய கருத்துக்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் தீண்டாமை மற்றும் சமூகப் பாகுபாடு இன்னும் நிலவி வருவதாகவும், இளைஞர்கள் கைகளில் சாதிக் கயிறு அணிந்து கொள்ளும் ஒரே மாநிலம் இதுதான் என்றும் கூறினார்.
இந்த கருத்துக்கு பதிலளித்த தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ஆதாரமற்ற பிரசாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். “திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அடைந்த முன்னேற்றத்தை ஆர்.என். ரவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதி அமைப்பை நிலைநிறுத்துவதற்கு சனாதன தர்மம் காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் பிளவு ஏற்பட்டதற்கு சனாதன தர்மமே காரணம்” என்று கூறினார்.
தமிழகத்தில் பிராமணர் அல்லாதவர்களை கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கும் மாநில அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைத்த சரவணன் அண்ணாதுரை, இந்த மாற்றங்களை ஏற்க முடியாமல் ஆளுநரின் இந்த் கருத்துகள் வந்துள்ளதாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“