நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நெல்லை தொகுதி பாஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோந்தனை நடத்த வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில், சனிக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகள் , 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது. அவர்கள், நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “ரூ. 4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக, அவரின் உதவியாளர் சதீஷ் மற்றும் 2 பேர் 4.5 கோடி பணத்தைக் கொண்டு சென்றிருக்கின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் ஹோட்டலில் சோதனை செய்துள்ளனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பல கோடி பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல், பா.ஜ.க-வும், தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.