தி.மு.க அமைப்புச் செயலாளர் மற்றும் மூத்த தலைவராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “பெருந்தலைவர் காமராஜர் தி.மு.க-வினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். எந்த காங்கிரஸ்காரர்களும் அதைச் செய்யவில்லை. இன்றுவரை காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையில்தான் அனைவரும் வணங்கி வருகின்றனர். மன்னிக்க வேண்டும். நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், தி.மு.க மூத்த தலைவர், காமராஜர் குறித்து அவதூறாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும், இது போன்ற அநாகரிகமான, பொய்யான பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் ‘வெட்டுவேன்’ என்று அரசியல் பேசியவர் இல்லை. அவர் புகழ் என்றும் வாழும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சி செய்து, எல்லோருக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவரைப் பற்றிப் புறம் பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். நெல்லை, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம், காமராஜர் குறித்து அவதூறாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நவம்பர் 1-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியதை “வெட்டியும், ஒட்டியும்” பா.ஜ.க சார்ந்த சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளன. என்னுடைய முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும். இது குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளேன். இருப்பினும் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் உள்பட நிர்வாகிகள் சமீப நாட்களில் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது. இது தி.மு.கவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனப் பலர் கூறிவந்தனர்.
இந்தநிலையில் தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, ஆர்..எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil