“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார். விஜயகாந்த் துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதாவும் இறந்திருக்கமாட்டார்” என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
அண்மையில், மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருந்தால், கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார், இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் என்ற தெம்பில் மறைந்திருக்க மாட்டார், ஜெயலலிதாவும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இருந்திருப்பார். ஆனால், கலைஞர் அழைப்பு விடுத்தும் விஜயகாந்த் கூட்டணிக்கு மறுத்து துரோகம் செய்துவிட்டார் என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பதாவது: “விஜயகாந்த், அண்மையில் ஒரு நடிகர் மறைந்தார். காலையில் 6 மணி 7 மணிக்கெல்லாம் செய்தி வருகிறது. 7.30 மணிக்கெல்லாம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை யாரும் அவரைக் கேட்கவில்லை, விஜயகாந்த் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார் என்று அறிவித்தார். அதை (அரசு மரியாதை) பிரேமலதாவும் கேட்கவில்லை, எவரும் கேட்கவில்லை. ஆனால், தானாகவே விஜகாந்த் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார் என்று மு.க. ஸ்டாலின் கூறினார். அது எந்த விஜயகாந்த்?
அந்த விஜயகாந்த் மட்டும் 2016-ல் கலைஞர் கருணாநிதி கேட்டபோது, நம்மோடு, கூட்டணி வைத்திருந்தால், அவர் முதலமைச்சராகவே இறந்திருப்பார். கலைஞர் ரொம்ப அருமையாக சொன்னார். விஜயகாந்த் என்கிற கனி, மரத்திலே இருக்கிறது. நிச்சயமாக அந்த கனி என் மடியிலேதான் விழும் என்று மிகுந்த உருக்கத்தோடு, பெருந்தன்மையோடு, விஜயகாந்த்-க்கு 2016-ல் அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த விஜயகாந்த் நம்மோடு கூட்டு சேர மறுத்துவிட்டு, தனியாக நின்றார். அன்றைக்கு மட்டும் அவர் தனியாக நிற்காமல் நம்முடைய கூட்டணியில் நின்றிருப்பாரானால், கலைஞர் ஒரு முதலமைச்சராக இறந்திருப்பார். இன்னும் சொன்னால், மறைந்திருக்கவே மாட்டார். முதலமைச்சர் பதவி 2016-ல் கிடைத்திருந்தால், அந்த தெம்பிலேயே அவர் வாழ்ந்திருப்பார். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதாகூட இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால், ஜெயலலிதா இந்நேரம் அமெரிக்கா போய் உடல்நிலையை சரி செய்துகொண்டு, எதையெல்லாம் மாற்ற வேண்டுமோ அதையெல்லாம் மாற்றிக்கொண்டு அவரும் உயிரோடு இருந்திருப்பார். அதே போல, விஜயகாந்த்தும் இறந்திருக்க மாட்டார். அன்றைக்கு படுத்தவர்தான் அதற்கு பிறகு, எழுந்திருக்கவில்லை. அவரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, இந்நேரம் நமக்கு அவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், விஜயகாந்த், எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார். முதலமைச்சராக மறைய வேண்டிய கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இல்லாத ஒரு நிலையில், அவர் மறைவதற்கு காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இருந்தாலும், மு.க. ஸ்டாலின், (அரசு மரியாதை) செய்தார் என்றால் என்ன காரணம், அந்த வலி அவருக்குத் தெரியும். நம்முடைய தந்தைக்கு எடப்பாடி மறுத்த நேரத்தில், நீதிமன்றத்திற்கு சென்று நான்தான் அந்த வழக்கைப் போட்டேன். அந்த வழக்கில் வென்று கலைஞருக்கு மெரினாவில் அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தோம்.” என்று ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“