Rs Bharathi | dmk | nirmala-sitharaman: இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது.
சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது. அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வழங்கியது. ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.
4 மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார்?. நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் டெல்லியில் இருந்தார். இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார். இரவு நேரம் என்றாலும் பிரதமர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.
மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டதா?. 4 நாட்களுக்குப் பிறகு தான் தூத்துக்குடி போய் மக்களை சந்தித்துள்ளார்.
"மழைநீர் வடிகால் பணிகள் 42% மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள்: அதிலும் சந்தேகம். வெல்ல தடுப்பு நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தாலே பாதிப்பை தவிர்த்து இருக்கலாம். மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவளிக்கவில்லை. ரூ. 4000 கோடி செலவிடப்பட்டதா?.
2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இவ்வளவு மழை பெய்யும் என யாரும் சரியாக கணித்துக் கூற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கமால் வானிலை மையத்தை குறைவது ஏன்? மழை எச்சரிக்கை அடிப்படையில் எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
ரூ.6,000 நிவாரணத்தை தொகையை வங்கிக் கணக்கு மூலம் அளிக்கலாமே. ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்?. ரூ.6,000 நிதியை ரொக்கமாக வழங்கியதற்கு பதிலாக வங்கிக் கணக்குகளில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Watch: Smt @nsitharaman's full media interaction on the efforts of Central Govt on Tamil Nadu flood relief.@PIB_India @FinMinIndia @MIB_India @DDNewslive @airnewsalerts @pibchennai https://t.co/nrZU9HR8Ew
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) December 22, 2023
ஆர்.எஸ்.பாரதி பதில்
மத்திய நிதியமைச்சர் தமிழக அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த நிலையில், அதற்கு தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், பா.ஜ.க எந்த காலத்திலும் உண்மை பேசியது கிடையாது. பல பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை தரப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயத்தை அரசு மறைத்திருந்தால் கூட ஊடகங்கள், பத்திரிகைகள் அதை வெளியிட்டிருக்கும். எனவே இப்படிப்பட்ட பச்சை பொய்யை மத்திய அமைச்சர் கூறுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், நமது மாநிலத்திற்காக வாதாடி தாராளமாக நிதியை வாங்கி தருவதற்கு முன்வர வேண்டும். தமிழகத்தை காட்டி கொடுக்கும் வகையில் பேசுவது வேதனை அளிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் இவரது பேச்சு அமைந்திருக்கிறது. அரசியல் பேசுவதற்கு இது நேரமல்ல.
தமிழக மக்கள் தத்தளிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குஜராத் மாநிலத்திற்கு கேட்காமலேயே சென்று உதவி செய்யக் கூடிய மத்திய அரசு, தமிழகம் கேட்ட பிறகும் தயக்கம் காட்டுகிறது. நமது மாநிலம் இந்திய வரைபடத்தில் தான் உள்ளது. ஒருவேளை தமிழகம் என்ற மாநிலமே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களா? எனத் தெரியவில்லை.
ரூ. 4000 கோடி செலவிட்டதால் தான் மழை வெள்ளம் வடிந்தது. 4,000 கோடி ரூபாய் நிதி எப்படி செலவிடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதை செலவு செய்யாமல் விட்டிருந்தால் சென்னை என்னவாகி இருக்கும் என்பது மனசாட்சி உள்ள நபர்களுக்கு தெரியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.