அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஃபீஞ்சல் புயலை எதிர்கொள்ள எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க அரசை கண்டித்து தீர்மானம் உள்பட தி.மு.க அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து, “மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பா.ஜ.க-வுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல், ஆனால், சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு அரசுக்குக் கண்டனமாம்” என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அ.தி.மு.க-வை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவைக் கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் தி.மு.க அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது எனத் தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் எனக் கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.” என்று அர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
மேலும், “இந்திய வானிலை ஆய்வு மையத்தாலேயே கூட சரிவர கணிக்க முடியாத ஃபீஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு, எதிர்பார்க்காத இடங்களில் அதி கன மழை பெய்த போதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினால் உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மழைக்காலத்திற்கு முன்பாகவே 12.06.2024-ல் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட ஏரி, குளம், கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தியதன் விளைவாகத்தான் ஃபீஞ்சல் புயல் பெருமழையின் போதும், அதன் பின் அடுத்தடுத்து அதி கனமழை பெய்த போதும் ஏரி, குளங்களில் நீர் தக்க வகையில் தேங்கி மழை நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “கடந்தகால நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க ஆட்சியில் புயலின் போது பெருத்த உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதை போல தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் நடக்கும் என எண்ணி ஏமாந்து போன பழனிசாமி தற்போது கண்டன தீர்மானமாவது நிறைவேற்றுவோம் என நிறைவேற்றி இருக்கிறார். ஒன்றிய பா.ஜ.க அரசோடு கூடிக்குலாவி கூட்டணியில் இருந்த காலத்தில் 15-வது நிதி ஆணையம் தெரிவித்த வரி உயர்வைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டளையை, சிரம் ஏற்று 'சரி' என தலையாட்டி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு தற்போது சொத்துவரி பற்றி நீலிக் கண்ணீர் வடித்து நடித்துள்ளார் சொத்துவரி உயர்வுக்குக் காரணமான பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் எனக் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களைக் காத்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.” என்று ஆர்.எஸ். பாரதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை அ.தி.மு.க ஆதரித்ததுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ். பாரதி, “ஒன்றிய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய, ஒன்றிய அரசு தனித்து ஏலம் விடும் அதிகார சட்டத் திருத்தத்தை வாயாரப் புகழ்ந்து, வானளவு வாழ்த்தி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆதரித்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு தற்போது அது வெளிப்பட்ட உடன், என்ன செய்வதென்று தெரியாமல் தி.மு.க மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் நாடகத்தை நடத்தி உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அடிமை அ.தி.மு.க ஆட்சிதான். 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
மேலும், ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில், “இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயற்சிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) நிறைவேறக் காரணமாக இருந்த அடிமை அதிமுக, தற்போதும் கூட இஸ்லாமிய சமூக மக்களை அவதூறாக பேசிய நீதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவரும் அடிமை அதிமுக, இன்று இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுவிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. அதிர்ஷடத்தின் வழியில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி மதவாத சக்திகளோடு கைர்கோத்து சிறுபான்மை மக்களின் உரிமையை அடமானம் வைத்துவிட்டு, தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிபோடாத பழனிசாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன? தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பா.ஜ.க-வோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பா.ஜ.க-வுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால், சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம். இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?" என்று ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“நிர்வாகத் திறனற்ற பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் நசிவுற்ற அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் திராவிட மாடல் விடியல் ஆட்சியில் மேம்பட்டிருக்கின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமும், முதலமைச்சரே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலீடுகளைத் திரட்டியதன் விளைவாகவும் தமிழ்நாட்டில் பெரும் நிறுவனங்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக இந்தியாவிலேயே அதிக வேலையாப்பினை உருவாக்கி வளர்ச்சிப்பாதையில் முன்னணியில் இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் இன்று பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதத்திலும், சுயசார்பு நிலையிலும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளது. அடிமை அதிமுக ஆட்சியில் இருள் சூழ்ந்து கிடந்த தமிழ்நாடு திராவிட மாடல் நல்லாட்சியில் ஒளி வீசுயபடி வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக் கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்ப போவதல்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை.” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.