சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜுன் 14-ம் தேதி இரவு கைது செய்தனர். கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வழி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவிரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிக்சை செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற காவலில் உள்ளார். அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பான மனுக்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தி.மு.கவிற்கு செந்தில் பாலாஜி வந்த போதே அவரை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து விடுகிறது. இதன் பின் சிலர் திட்டமிட்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். செந்தில் பாலாஜி இரவில் கைது செய்யப்படுகிறார். இது மனித உரிமை மீறல் என்று நான் சொன்னேன், அதையே நீதிமன்றமும் நேற்று
கூறியுள்ளது.
அமலாக்கத் துறை உள்ளே நுழைந்து சோதனை செய்ய அதிகாரம் இல்லை. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு 4 அடைப்புகள் இருக்கிறது. அதனால் அவர் தப்பித்துக் கொண்டார். அவர் கோயில் செல்ல கூடியவர். அந்த ஆண்டவன் தான் அவரை காப்பாத்திருக்கான்.
இன்னும் 2 நாட்கள் கழித்து சென்றிருந்தால் அவரது உடல் நிலை மோசமாகி இருக்கும். மாரடைப்பு எப்படி வருகிறது என்று சொல்ல முடியவில்லை. அவர் உடனடியாக மருத்துவமனை சென்றதால் தப்பித்தார். இல்லை என்றால் திகார் கொண்டு சென்று அவரை சித்திரவதை செய்திருப்பார்கள், பின்னர் அவரது நிலை மிகவும் மோசமாகி இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பா.ஜ.க அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க ஐ.டி, இ.டி, சி.பி.ஐயை பயன்படுத்துகிறது" என்று விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“