நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் திமுகவில் இணைந்தனர். அங்கே உள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ். பாரதி, "தற்போதுள்ள மீனவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இப்போது திமுகவில் இணைந்து வருகிறார்கள். மீனவர்கள், மீனவ இளைஞர்கள் எல்லாம் இப்போது திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். திமுக தலைமைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. அவை எல்லாம் அதிகபட்சம் ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது. இப்போது கட்சி ஆரம்பிக்கும் நபர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது" என்று கூறினார்.
முன்னதாக, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் கொடி, பாடலை அண்மையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“