குடும்ப அரசியல் நடத்துவதாக திமுகவை பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு பதிலளித்துள்ளார்.
திமுக நிர்வாகி கும்மிடிப்பூண்டி வேணு இல்லத்தில் வைத்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு ஒரு உரையாற்றி உள்ளார். குடும்ப அரசியலை திமுக நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உண்மை தான்.
திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான். அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கிய போது, கழக தோழர்களை தம்பி என்று தான் அழைத்தார். கலைஞர், கழக தோழர்களை உடன்பிறப்பே என்று தான் அழைத்தார். ஆகவே இது உள்ளபடியே குடும்ப அரசியல் தான்.
திமுக நடத்தும் மாநாடுகளுக்கு, குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்று தான் கலைஞர் அழைப்பார். மாநாடு மட்டுமல்ல, போராட்டத்திற்கும் குடும்பம் குடும்பமாக சென்று சிறை சென்றிருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி, திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் பேசியுள்ளார். ஆம். கருணாநிதி குடும்பமே தமிழ்நாடு தான், தமிழர்கள் தான்.
நாட்டின் பிரதமராக உள்ள மோடிக்கு வரலாறு தெரியவில்லை. பிரதமருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தின் வெளிப்பாடே திமுக மீதான விமர்சனம். ஆளும் கட்சியாக இருந்தாலும், நல்லதை செய்ய கூட இன்றைய காலத்தில் பயப்பட வேண்டியுள்ளது. நல்லதை கூட பொறுமையாக, கவனமாக, நிதானமாக, அச்சத்துடன் செய்ய வேண்டியுள்ளது. எப்படி தமிழகத்தில் நமது ஆட்சி உருவானதோ, அதே போல் மத்தியில், மதச்சார்பற்ற ஆட்சி, மாநில உரிமைகளை வழங்கும் ஆட்சி உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil