பா.ஜ.க-வில் உள்ள நடிகைகளைப் பற்றி ஆபாசமாக பேசிய வழக்கில், தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.க நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமானப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில், அதனை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து ஆபாசமான கருத்துகள் பேசியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. அதன் ஆடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சைதை சாதிக் மீது மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கெனவே இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சைதை சாதிக் பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டு பிரமானப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, சைதை சாதிக் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சைதை சாதிக் பா.ஜ.க நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டு பிரமானப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த பிரமானப் பத்திரத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சைதை சாதிக் தினமும் ஒரு வாரத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"