scorecardresearch

கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞர்; ஆபாசமாக பேசி மிரட்டிய தி.மு.க ஒன்றிய செயலாளர்

சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் சென்ற பட்டியல் இன இளைஞரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிகத்தை உடனே கைது செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Dalit issue, DMK Union secretary slurring on Dalit Youth, Salem, Salem District, Thirumalaigiri Dality youth

தலித் இளைஞரை பொதுவில் கூட்டத்தில் நிற்க வைத்து ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. மேலும், ஓரிரு தினங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞரை பொதுவில் நிற்க வைத்து, சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு மற்றும் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான டி. மாணிக்கம் என்பவர் திருமலைகிரி கிராமத்தைச் சார்ந்த பட்டியலின இளைஞர் பிரவீன் என்பவரையும், கிராமத்து மக்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுவதும்,ஊரை விட்டே விரட்டி விடுவேன் என்று அச்சுறுத்துவதும், சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனை அறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோவிலுக்குள் சென்றால் கோவில் தீட்டாகிவிடும் என்றும், சாதி இந்துக்களாகிய நாங்கள் கோவிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்ததாகக் கூறி, ஒன்றிய தி.மு.க செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான டி. மாணிக்கம் என்பவர் கடந்த 27-ம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்து பேசியதோடு, கிராமத்து மக்களை கிராமத்தை விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டுகிறார்.

இந்தச் செய்தியை அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சேலம் இரும்பாலை காவல்துறையினர், வெட்கக்கேடான முறையில் பிரவீனை அழைத்து சமாதானப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தி.மு.க ஒன்றியச் செயலாளரை
எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து எங்கிருந்தாலும் கைது செய்ய வேண்டும். இவ்வளவு கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடிய, தலித் மக்களுடைய வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளியேற்ற வேண்டும்.

மேலும், ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும்” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தி.மு.க பொதுச் செயலாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk salem union secretary sluring and threaten to dalit youth for temple entry