திமுக சார்பில் ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசியை அழைக்கவில்லை, அவரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம் என்று திமுக சிறுபான்மையினர் அணி செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திமுகவின் சிறுபான்மையினர் அணி சார்பில், ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுபினருமான அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஓவைசி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஓவைசி, நவம்பர் மாதம் வெளியான பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றார். பல இடங்களில் ஆர்.ஜே.டி, காங்கிரச், ஜேடியு ஆகிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் அளவில் அவருடைய கட்சி வாக்குகளைப் பெற்றது. பீகாரில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தனித்து போட்டியிட்டதால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக நடத்தும் சிறுபான்மையினர் அணி பொதுக்கூட்டத்தில் ஓவைசி கலந்துகொள்வதன் மூலம் அவர் தமிழக அரசியலுக்குள் நுழைகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதே நேரத்தில், திமுகவின் கூட்டணியில் உள்ள முஸ்லிம் ஆதரவுத் தளத்தைக் கொண்ட மமக, முஸ்லிம் லீக் போன்ற கட்சி தலைவர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, திமுக ஜனவரி 6ம் தேதி நடத்தும் கூட்டத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியை அழைக்கவில்லை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம் என்று திமுக சிறுபான்மையினர் அணி செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் ஊடகங்களிடம் கூறுகையில், “நாங்கள் மரியாதை நிமித்தமாகவே ஓவைசியை சந்தித்தோம். அவர் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எதுவும் முடிவெடுக்கப்படவில்லை. எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே முறையாக அறிவிக்க விரும்பினோம். ஆனால், அதற்கு முன்னர், ஓவைசியை நாங்கள் சந்தித்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டது. யார் இதைச் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், “நாங்கள் ஒருபோதும் அந்த பிரச்சினைகளுக்கு செல்லவில்லை. கூட்டத்தில் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்” என்று கூறினார்.
அதே போல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் கூறுகையில், தான் ஓவைசி அழைப்பதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், எங்கள் நோக்கம் பாஜகவை தோற்கடித்து அவர்கள் தமிழ்நாட்டை பிடிப்பதைத் தடுப்பதுதான்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"