தமிழக பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலை, தி.மு.க. ஃபைல்ஸ் என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.
அதில், மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டன.
தொடர்ந்து, திமுக குறித்து சில தகவல்களை அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோ டேப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகின.
இதில் பேசியது தாம் அல்ல என பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் தி.மு.க. வழக்கு தொடுக்காது.
அவர்தான் இது தொடர்பாக வழக்கு தொடுக்க வேண்டும். மேலும், அந்த ஆடியோ பொய்யானது என ஏற்கனவே அவர் மறுத்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து, “தி.மு.க. தலைவர்கள் மீது அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“