திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார். இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
துர்கா ஸ்டாலின், தனது கடவுள் நம்பிக்கையை மறைத்து வைக்கிறவர் அல்ல. வெளிப்படையாக கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்துகிறவர் அவர். அண்மையில் நாகை மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் குல தெய்வமான அங்காளம்மன் கோவிலை அவர் புதுப்பித்துக் கட்ட உதவியிருக்கிறார்.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அந்தக் கோவிலுக்கு அண்மையில் அவர் சென்றார். கொரோனா காலகட்டம் என்பதால் முக கவசம் அணிந்தபடி அவர் அந்தக் கோவிலுக்கு சென்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
https://www.facebook.com/IETamil/posts/3265927390152767
இந்த கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை துர்கா பார்வையிட்டார். அப்போது துர்காவிடம் பிரமுகர் ஒருவர் 'கோயில் பணிகளை நீங்கள் வந்து பார்வையிட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சிறியதாக ஆரம்பித்த கோயில் பணி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கட்டுமான வேலை துவங்கி அஸ்திவாரம் துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன' என்றார்.
கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நின்றபடி துர்கா பார்வையிடும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது. துர்காவின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"