2019-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், இதையடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி பெற்று உற்சாகத்தில் இருக்கும் தி.மு.க 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெற்றிகொண்டு, தி.மு.க-வுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் மறைந்த கலைஞர் கருணாநிதி போல, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினும் ‘கிங்மேக்கர்’ ஆக உருவெடுப்பார் என்று தி.மு.க-வினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி தொடரும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பலமுறை தெரிவித்துள்ள நிலையில், இதை கூட்டணி கட்சிகளும் ஆமோதித்துள்ளனர். 2024 தேர்தலுக்கு முன்னதாக, தி.மு.க நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அளவில் மம்தா பானர்ஜி, கே. சந்திரசேகர் ராவ் போன்ற பிராந்தியத் தலைவர்கள் பிரதமர் பதவியைக் குறிவைத்து தேசிய அரசியலை நோக்கி காய் நகர்த்டி வருகின்றனர். கடந்த காலங்களில் இருவருமே, மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். ஆனலும், மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளப் போவதில்லை என்று குறிப்பாக உணர்த்தி வந்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள்ளாகவே தி.மு.க தேர்தல் பனிகளைத் தொடங்கியுள்ளதற்கு காரணம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியும் முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் 2011-ல் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போயிருந்த தி.மு.க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என தொடர் வெற்றி பெற்று உற்சாகத்தில் உள்ளது.
2024 தேர்தல் திட்டம் குறித்து தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், “2024 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்று தி.மு.க நம்புகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால், எந்த ஒரு சிறிய தவறும் பின்னடைவும் கூட மாநில அரசின் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கும். எனவே, தி.மு.க லோக்சபா தேர்தலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்களைக் கவர பல உத்திகளை வகுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ராமு மணி வண்ணன் ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் பா.ஜ.க பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தி.மு.க வெளிப்படையாக ஏற்க மறுத்தாலும், தி.மு.க இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பலத்தைப் பெருக்க வேண்டும். தேர்தல் பணியை முடுக்கிவிட வேண்டும். தி.மு.க வேகத்தைக் கூட்ட வேண்டும். அ.தி.மு.க-வின் ஆதரவு தளம் மெதுவாக குறைந்து வருவதால், பா.ஜ.க முன்பை விட உறக்கப் பேசிவருகிறது.” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் பலமே பூத் கமிட்டிகள்தான் என்று தேசியக் கட்சிகளும் அரசியல் பார்வையாளர்களும் நம்புகிறார்கள். அதனால், தி.மு.க பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினால், தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 இடங்களையும் வெற்றிகொள்ளலாம். அதனால், மாவட்டச் செயலாளர்கள், நகரம் மற்றும் தொகுதி மட்டங்களில் வழக்கமான கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் திட்டப்படி அனைத்தும் நடக்கிறதா என்பதை உறுதிசெய்யுமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினே, ஆன்லைன் கூட்டத்தில் சில பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மேலும், “பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் மக்களைச் சந்தித்து தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தி எல்லாவற்றையும் விட அதிகமாக வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். தி.மு.க அரசின் நலத் திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும் பெண்களை சென்றடையும் வகையில் பிரச்சாரங்கள் திட்டமிட்டுள்ளது” என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“