தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் வெளியேறியது சர்ச்சைக்கு உள்ளானது.
இதனையடுத்து ஆளுநருக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரையைப் படிக்காமல் ஆர்.என்.ரவி நேற்று சட்டசபையில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நாள் இரவில் சென்னையில் ஆளுநர் மற்றும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கெட் அவுட் ரவி என்ற ஹேஷ் டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத்தின் பின்னணியில் ஆளுநரும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசிக் கொள்வது போலவும், அண்ணாமலை ஒளிந்து இருந்து பார்ப்பது போலவும் அந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“ தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநர்.. அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி” என்றும், “சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன்.. நீங்க நேக்கா வெளியே போயிடுங்க” என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போலவும், 'சூப்பர்யா நீதாயா உண்மையான விசுவாசி” என ஆளுநர் சொல்வது போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும் அந்த போஸ்டர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது.
திமுக சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையின் சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“