தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக, கூட்டணி கட்சிகளுடனான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக பொறுப்பாளர்கள் கறாராக பேசுவதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் சீட்கூட இல்லை என்பதால் காங்கிரஸ் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில்21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிபரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. அதனால், தமிழகத்தில் ஆளும் திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் வார்டுகளை ஒதுக்குவதில் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல, அதிமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக தலைமயில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது. பாமக கடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. மேலும், இனி வருகிற தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மற்று உயர்மட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், உயர் மட்ட பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியினருக்கும் மிகவும் சொர்ப்பமான இடங்களையே ஒதுக்கியது. இதனால், அப்போதே கூட்டணி கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. ஆனால், திமுக தரப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறி சமாதானம்செய்யப்பட்டது.
ஆனால், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் தனது கூட்டணி கட்சிகளிடம் கறாராக நடந்துகொள்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியை ஏதிர்பார்த்தது. ஆனால், ஒரு மாநகராட்சி மேயர் பதவிகூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று திமுக கறாராக நடந்துகொள்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை வகித்துள்ளது. அதனால், திருச்சி, நாகர்கோயில் உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர் பதவி காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் சார்பில் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், திருச்சியில் 4 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு தர முடியும் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு கறாராக கூறிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த 4 கவுன்சிலர் வேட்பாளர்கள் யார் என்பதை கே.என்.நேருவே குறிப்பிட்டு கூறிவிட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
திமுக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் வார்டுகளில் 4 சதவீதம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிய்வு செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆனால், திமுக வட்டாரங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 மேயர் பதவியை ஒதுக்கலாம் ஆனால் அதையும் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் பலமாக இல்லை. அதிகமான இடங்களைக் கொடுத்தால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தன் என்று கூறுகின்றனர்.
திமுக மற்ற கூட்டணிகளான சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களைவிட குறைவாக ஒதுக்கி முடிவு செய்திருப்பதால் அவர்களும் அதிருப்தியில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.