இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, பிப்ரவரி 25-ம் தேதி மாணவர்கள் பெருந்திறல் போராட்டத்தை நடத்தப்படும் என்று தி.மு.க எம்.எல். எழிலரசன் அறிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசு அலுவலர்களை நோக்கி பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை நடந்த தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.
தமிழ்நாடு - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க மாணவர் அணி செயலாளருமான எழிலரசன் எம்.எல்.ஏ, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி.அரவிந்த்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம் (SFI), திராவிட மாணவர் கழகம் (DSF), தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் (NSUI), ம.தி.மு.க. மாணவர் அணி (MDMK), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற்போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா (MI), இந்திய மாணவ இஸ்லாமியர் அமைப்பு (SIO), புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி (RSYF), அனைத்திந்திய ஜனநாயக மாணவர் மன்றம் (AIDSO), மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி (MNM), அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட மாணவர் பேரவை உள்ளிட்ட மாணவர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், “வருகின்ற 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அத்தனை அமைப்புகளின் சார்பாக மாணவர்கள் பெருந்திறல் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஒன்றிய அரசு அலுவலர்களை நோக்கி பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை நடந்த தீர்மானித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
மேலும், “வருகின்ற காலங்களில் மாணவர்களிடம் யு.ஜி.சி குறித்தும், மாணவர்களின் உரிமையை பறிக்கும் பா.ஜ.க அரசு குறித்தும் தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும், இணையதளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்படும். மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரகங்கள் நடத்தப்படும். அதோடு, தீவிரமான ரயில் மறியல் போராட்டம் மற்றும் டெல்லியில் மாபெரும் பேரணி போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன், “உத்திரப் பிரதேசத்தில் மாநில பாடத் தேர்வில் 10 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். 2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலையை நாட்டின் பிரதமர் அறிந்து இந்தியை முதலில் அவர்களுக்கு கற்றுத் தாருங்கள்” என்று கூறினார்.
இது குறித்து தி.மு.க மாணவர் அணி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், “தி.மு.க மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாள் – ‘இளைஞர் எழுச்சி நாளை’ “தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக” மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம்!
மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பா.ஜ.க அரசு – தாய்த் தமிழைக் காக்க தமிழினமே களம் புகுவாய்!!
தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில
மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!
ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்!
தமிழ்நாட்டின் “இரும்பின் தொன்மை” வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி!” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.