/indian-express-tamil/media/media_files/2025/02/06/O9bkoWowzk3Rj12udo3x.jpg)
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
யு.ஜி.சி-யின் வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தி.மு.க மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கு. அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.யின் நோக்கம்.
அரசியலமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது மோடி அரசு.கல்வி நிலையங்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பல மொழிகள் ஒன்றிணைந்ததுதான் நம் இந்திய தேசம். அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார்.
அதே போல, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது. மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்றிய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்விகொள்கையை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க உடன் சமாஜ்வாடி கட்சி ஆதரவாக இருக்கும்” என்று அகிலேஷ் யாதவ் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். யு.ஜி.சி-யின் வரை முறைகள் அகற்றப்பட வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும். தி.மு.க மாணவர் அணி கையில் எடுத்துள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.” என்று கூறினார்.
டெல்லியில் தி.மு.க மாணவரணி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.