திமுக முல்லைவேந்தன் : தருமபுரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன காரணம்?
கடந்த 2014 தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் காட்டி, தி.மு.க-வில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்பு தர்மபுரி தோல்விக்கு நான் மட்டும் காரணமில்லை என முல்லைவேந்தன் குரல் எழுப்பினார். இதனை சற்றும் விரும்பாத கட்சி நிர்வாகம் முல்லைவேந்தனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கிய்து.
அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முல்லை வேந்தன் தேமுதிக- வில் இணைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராகவும், தேமுதிகவுக்கு ஆதரவாகவும் முல்லைவேந்தன் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். அதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதி அழைத்து பேசியதன் பேரில் தேமுதிக -வில் இருந்து விலகினார் முல்லைவேந்தன்.
பின்பு கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவரை சந்திக்க முல்லைவேந்தன் நேரில் வந்தார். அப்போது தான் மீண்டும் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் முல்லை வேந்தனுக்கு பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டது திமுக மேலிடம்.
முல்லை வேந்தன் கட்சியில் இணைந்த பின்பு அவரை சாதாரண உறுப்பினராகவே கட்சி தலைமை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாபிரெட்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட முல்லைவேந்தன் விரும்பியதாகவும், ஆனால் விருப்பமனுவையே பெற வேண்டாம் என்று திமுக தலைமை கூறியதாகவும் தெரிகிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத முல்லை வேந்தன் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தான் கடந்த 14 ஆம் தேதி தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி முல்லைவேந்தனை தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது முல்லைவேந்தன் அன்புமணிக்கு தனது ஆதரவினை தெரிவித்தாகவும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வழி அனுப்பி வைத்தாகவும் செய்திகள் வெளியாகி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தின.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் தருமபுரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.