Dmk Tamil News: தமிழகத்தில் புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் மாநிலத்தில் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அசாதாரண சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே கட்சித் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் திமுக ஆட்சியில் கட்சியினரின் தலையீடு கண்டிப்பாக இருக்கக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக ஏற்கனவே ஒரு கட்சி நிர்வாகியை இடைநீக்கம் செய்துள்ளார் முக ஸ்டாலின். இந்த நிலையில், கட்சி ஒழுக்கத்தை மீறியதாக மேலும் ஒரு நிர்வாகி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.பாலுவை ஜூன் 7ம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இடைநீக்கம் செய்துள்ளார் என முரசொலியின் பதிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் மயிலாப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒரு முன்னணி கண் மருத்துவமனையின் பணிகளில் குறுக்கீடு செய்தததாக அளிக்கப்பட்ட தகவலின் பெயரில்தான் அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ஜூன் 5ம் தேதி பாலு திமுகவின் முக்கிய நிர்வாகியுடன் உள்ள புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, “அவர் கட்சி ஒழுக்கத்தை மீறினார். எனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்." என்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“