Tiruvotriyur DMK MLA KP Shankar Tamil News: திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் கே.பி.சங்கர். இவருடைய சகோதரர் கே.பி.பி. சாமி, திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும், 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றிவர். கடந்த 2020ம் ஆண்டு கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், 2021ம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் கே.பி.சங்கர் களமிறங்கினார்.
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட்ட கே.பி.சங்கர், கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தற்போது, திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளராகவும் கே.பி.சங்கர் பணியாற்றி வருகிறார். இவர், சமீபத்தில், சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
மாநகராட்சி பொறியாளரை தாக்கிய கே.பி.சங்கர்
இதற்கிடையில், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சியின் உதவிப் பொறியாளரை அடித்ததோடு, திருவொற்றியூர் நடராஜன் கார்டன் பகுதியில் நடைபெற்று வந்த சாலைப் பணியையும் நிறுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் மண்டலத்தில் பல சாலைகள் அமைக்க ₹3 கோடி மதிப்பிலான டெண்டரை சாலை இணைப்பு உள்கட்டமைப்பு என்ற ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இதன்படி, நேற்று முன்தினம், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன் கார்டன் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில் ₹30 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது.
திருவொற்றியூர்
திமுக எம்.எல்.ஏ., கே.பி. சங்கர்
அப்போது, நான்கு பேருடன் அந்த இடத்திற்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி. சங்கர், சாலை போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார் என சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "சென்னை பெருநகர மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் பிரச்சினையைத் தீர்க்கத் தலையிட்டபோது, அவரை எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்கினர். பொறியாளரின் உதவியாளரும் தாக்கப்பட்டார். அந்த இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 13 லாரி ரோடு கலவை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளான மாநகராட்சி உதவிப் பொறியாளர் வியாழக்கிழமை விடுமுறையில் சென்றார். நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒப்பந்ததாரரிடம் பணி செய்யக் கூடாது என தெரிவித்தும், பணி நடப்பதால் எம்.எல்.ஏ., கோபமடைந்தார். அவர் அந்த இடத்தை அடைந்தவுடன், அவரும் அவரது ஆட்களும் எங்கள் அனைவரையும் அடித்தனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் எம்எல்ஏ என்னை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் பணியை அனுமதிக்க ஒப்புக்கொண்டார்," என்று கூறியுள்ளார்.
தவிர, கே.பி. சங்கர் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மேல் எழுந்துள்ள புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கே.பி. சங்கர் திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்." என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது!
சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும், சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?(2/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 28, 2022
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!(3/3) #RuleOfLaw
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 28, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.