scorecardresearch

அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம்: தலைவர்கள் கண்டனம்

அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம்: தலைவர்கள் கண்டனம்

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 6ம் வகுப்பு சமுக அறிவியல் பாடத்தில் திருவள்ளுவர் காவி உடையில் சித்தரிக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. காவி உடையில் திருவள்ளுவர் சித்தரிக்கப்பட்டதற்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதோடு, திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் சித்தரிக்கப்பட்டதாலும் திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவித்ததாலும் பெரும் சர்ச்சையானது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜகவினர் சமூக ஊடகங்களில் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை பகிர்ந்தனர். ஒரு வழியாக அந்த பிரச்னை ஓய்ந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் காவி உடையில் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இடம்பெற்றதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 6ம் வகுப்பு சமூக அறிவிய பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றதற்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ் நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு, தங்கள் கட்சியை மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையுமே மத்தியில் ஆளும் பிஜேபியிடம் அடகு வைக்கத் துணிந்து விட்டதைத் தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.

தமிழர் பண்பாட்டுச் சின்னமான ஜல்லிக்கட்டு தொடங்கித் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீது மத்திய பாஜக அரசு தொடுக்கும் எல்லாவிதத் தாக்குதல்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்முகத்தோடு வரவேற்று வெண்சாமரம் வீசுவதின் மூலம் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அதிமுக அமைச்சர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கான எண்ணிறைந்த எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழர்தம் தொல் பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் அல்ல; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல், நாக்கில் நரம்பின்றி சொன்னவர் தான் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கின்றார் என்பது அதிமுக ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு.

பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ் நாட்டில் இந்தித் திணிப்புக்கும், கல்வியில் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் போது, மொழி உணர்வு கிஞ்சிற்றும் இன்றி அதனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் துணிந்தவர்கள்தான் அதிமுக அரசின் அமைச்சர்களாகக் கொலுவீற்றுப் பதவி சுகத்தின் கடைசிச் சொட்டையும் விடாமல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கின்றார்கள்.

செம்மொழிக்கு எந்த ஆபத்து வந்தால் என்ன; நம்முடைய ஆட்சிக்கும், அதன் வாயிலாகக் குவித்து வைத்துள்ள ஆஸ்திக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணத்தில் மூழ்கி இருப்பதாலேயே, காவிகள் நச்சு எண்ணம் கொண்டு தங்கள் திட்டங்களைத் தமிழ் மண்ணில் நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்படும் போதெல்லாம் வாய் மூடி மெளனிகளாய் இருப்பது அதிமுகவின் வழக்கம்.

தமிழ் உணர்வு மிக்கோரின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நிகழ்வு இப்ப்போது நடைபெற்று இருக்கின்றது. பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலக தத்துவத்தை எடுத்துச் சொன்ன அய்யன் வள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக் ‘காவி வண்ணம்’ பூசும் கைங்கர்யத்தைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சி செய்து இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்களின் அருந்திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பாடப்புத்தகங்களின் மேலட்டையில் இடம் பெற்றிருந்த அய்யன் வள்ளுவரின் படத்தின் மீது ‘ ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்த ஆட்சியின் நீட்சிதானே இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. எனவே தான் அய்யன் வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத் தனத்திற்குக் கல்வித் தொலைக்காட்சியைத் தாரை வார்த்துத்தர துணிந்திருக்கின்றது.

தமிழ்ப் பற்றும், மான உணர்வும்மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது. “மகிமை கொண்ட நாட்டின் மீது மாற்றாரின் கால்கள்; மலர் பறிப்பதற்கல்ல மாவீரர் கைகள்” என்ற தலைவர் கலைஞரின் வைர வரிகளை மனதில் தேக்கிய மானமுள்ளோர், இத்தகைய ஆணவப் போக்கினைத் தடுத்து நிறுத்தியே ஆவர். மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு வரும் தேர்தலில் ஆளும் கட்சி என்ற பேரில் அடிமைச் சேவகம் செய்வோருக்குத் தக்க பாடம் புகட்டும்.

பதவியில் எஞ்சி இருக்கும் நாட்களிலாவது மான உணர்வுடன், அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk thangam thennarasu condemning for tamil nadu education tv broadcasted thiruvalluvar in saffron dress photos