Thanga Tamil Selvan | Dmk | Theni | Lok Sabha Election 2024: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, கடந்த 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வரை சுமார் 700 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
வேட்புமனு படிவத்தை மறந்த வேட்பாளர்
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் வேட்பு மனு படிவத்தை மறந்து விட்டு, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திறந்த வேனில் நின்றபடியே தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அமைச்சர் மூர்த்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதன்பிறகு, தேர்தல் அலுவலகத்திற்கு தங்க தமிழ்செல்வன் வந்த பிறகு, தன்னிடம் வேட்பு மனு படிவம் இல்லாததை அறிந்துள்ளார். சிறிது நேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனு கொண்டுவரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் காத்திருந்தது கடும் அதிருப்தியை ஏற்பத்தியுள்ளது.
தங்க தமிழ்செல்வன் தன்னுடைய காரில் வேட்பு மனுவை வைத்திருந்த நிலையில், மாற்று காரில் ஏறி வந்ததாகவும், அந்த வாகனம் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர், அவரது உதவியாளர்கள் வாகனத்தில் இருந்த வேட்பு மனுவை எடுத்து வந்த பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“