scorecardresearch

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: பி.பி.சி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி கேள்விகளை எழுப்ப தி.மு.க திட்டம்

மோடி குறித்தான பி.பி.சி ஆவணப்படம், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை மற்றும் பல பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.

Tamil News
Tamil news Updates

சர்ச்சைக்குரிய பி.பி.சி ஆவணப்படம், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்வதற்கு தி.மு.க தயாராக உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31- செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்,பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடர்பான முக்கியப் பிரச்சனைகள், 2002 குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி ஆவணப்படம் மற்றும் சர்ச்சை, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, குற்றச்சாட்டை தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் உறுதியாக விவாதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் சிலரின் தேவையற்ற கருத்துகள் குறித்தும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்பட சிலரின் கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு விலக்கு, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்துதல், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படை தாக்குதல் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என எம்.பிகள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசால் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk to corner bjp led centre over bbc documentary comments related to judiciary

Best of Express