/indian-express-tamil/media/media_files/2025/08/06/dmk-to-hold-silent-march-tomorrow-7-august-2025-traffic-arrangement-greater-chennai-traffic-city-police-tamil-news-2025-08-06-10-37-02.jpg)
போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் சென்னை போக்குவரத்து நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-வது நினைவு தின நாளை அனுசரிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள கலைஞர் சிலை (ஓமந்தூரார் வளாகம்) முதல் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவு மண்டபம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 5 முறை முதலமைச்சராக இருந்தவர் (1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011) மறைந்த தி.மு.க தலைவர் மு. கருணாநிதி. கடந்த 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்த இவர், 7 ஆகஸ்ட் 2018-ல் தனது 94-வது வயதில் காலமானார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-வது நினைவு தினம் இன்று தி.மு.க சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தகைமைசால் தலைவராக - எழுத்தாளராக - கவிஞராக -சொற்பொழிவாளராக -திரைக்கதை வசனகர்த்தாவாக -இலக்கியவாதியாக - திரைப்படத் தயாரிப்பாளராக தலைசிறந்த நிர்வாகியாக - தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக - உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி", ஆகஸ்ட்-7, வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்- முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு சென்னை மேற்கு சென்னை தென்மேற்கு சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில், தி.மு.க-வின் அமைதிப் பேரணியை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுளள்து. போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் சென்னை போக்குவரத்து நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
வாலாஜா சாலையில் ஊர்வலம் தொடங்கும் போது, அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்பட உள்ளது. வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கலாம். வாகன ஓட்டிகள் இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.