தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த பேரணி போராட்டத்தில் கலவரம் உண்டானது. இதனை கட்டுப்படுத்த நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானதை கண்டித்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் துப்பாக்கி சூடு நிகழ்வைக் கண்டித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் வரும் மே 25ம் தேதி அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டன போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தோழமை கட்சிகளும் பங்கேற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்த அறிக்கையை திமுக தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது:
,