நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி தி.மு.க இளைஞர், மாணவர், மருத்துவ அணி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு தோல்வி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசுக் கல்லூரியில் சேர முடியாத நிலை என மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
அண்மையில் சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாணவன், அவரின் தந்தை இருவரும் நீட் தேர்வால் உயிரிழந்தது மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற பயிற்சி மையங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது என்றும் மருத்துவக் கல்லூரியில் சேரவும் அதிக பணம் செலவு செய்ய வேண்டி உள்ளது எனவும் சென்னையில் உயிரிழந்த மாணவனின் நண்பர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு ரத்து மசோதா ஜனாதிபதிக்கு ஒப்புதல்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதா அனுப்பபட்டு பல நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று பேசினார். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் தி.மு.க கூட்டணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து தி.மு.க இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் ஆக.20-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”